குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. சபாநாயகர் தனபால் விளக்கம்.

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 15:22 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையிலும் இதே போல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறையினர் திடீரென தடியடி நடத்த தூண்டியது யார்? இது குறித்து விசாரிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதற்கு சபாநாயகர் தனபால் பதிலளிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து ஏற்கனவே பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள விஷயங்களை பேரவையில் விவாதிக்க முடியாது என பேரவை விதியில் கூறப்பட்டிருக்கிறது. திமுக கடிதத்தை ஏற்பது குறித்தும், நிராகரிப்பது குறித்தும் முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. தீர்மானம் தொடர்பாக என்னை நிர்பந்திக்க முடியாது.
எனவே, ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் அவையில் கொண்டுவர முடியாது. எதிர்க்கடசி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை பேரவையில் ஏற்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

You'r reading குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. சபாநாயகர் தனபால் விளக்கம். Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை