முஸ்லிம் போராட்டம் குறித்து சட்டசபையில் முதல்வர் விளக்கம்.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 12:36 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
வண்ணாரப்பேட்டையில் அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டார்கள். இதில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. பஸ்கள் மீதும், போலீசார் மீதும் கல், செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்படி அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான், கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். அதே போல், காவல் துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போது அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், வண்ணாரபேட்டை போராட்டத்தில் ஒரு முதியவர் இறந்தார் என்று திட்டமிட்டு ஒரு வதந்தையை பரப்பி விட்டு, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தூண்டி விட்டனர்.

போராட்டக்காரர்களை அழைத்து அரசுதரப்பில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே சில சக்திகள் தூண்டி விட்டு, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

READ MORE ABOUT :

Leave a reply