நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடத்த ஐகோர்ட் அனுமதி..

by எஸ். எம். கணபதி, Feb 17, 2020, 12:22 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக கூறி, தேர்தலை ஒத்தி வைத்து, தமிழக அரசின் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதி நடத்த அனுமதித்தது. அதே சமயம், முடிவுகளை அறிவிக்க தடை விதித்திருந்தது. இதன்படி, தேர்தல் முடிவுற்ற நிலையில், நடத்தப்பட்ட தேர்தலை செல்லாது என்று அறிவித்து, புதிய தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி, பெஞ்சமின், ஏழுமலை ஆகிய உறுப்பினர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றும், மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியது. மேலும், தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை சிறப்பு அதிகாரி கீதா கவனிப்பார் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் இந்த சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில். நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அச்சமயம், நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, விஷால் மேல்முறையீட்டு மனு பிப்.20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Leave a reply