குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் 5வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 13ம் தேதியன்று முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதற்கு பின்பு மீண்டும் ரவுண்டானா அருகே முஸ்லிம் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்தது.
இதையடுத்து, வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் கபில்சிபில் குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால், அவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அங்கு விரைந்து வந்தார். அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதன்பிறகு, மறுநாள் முதலமைச்சரை முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் அதற்கு, குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராமல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பதிலளித்தார்.
இதில் முஸ்லிம் மக்கள் திருப்தி அடையாததால், சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும்(பிப்.18) போராட்டம் நடைபெற்று வருகிறது.