சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசிடம் கூறுமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் இதைத் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ள தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்சிஆா்), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிராக, திமுக கூட்டணி சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பிப்ரவரி 2ம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் 8ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துப் படிவங்கள் பெறப்பட்டன. இந்தப் படிவங்களைச் சென்னை அறிவாலயத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, டெல்லிக்கு திமுக கூட்டணி தலைவர்கள் நேற்று சென்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் இந்த கூட்டணி குழுவினர் சந்தித்தனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆா்.பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரசின் மாணிக்தாகூா், மார்க்சிஸ்ட் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி, கொ.ம.தே.க.வின் சின்ராஜ் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றனர்.
திமுக கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களைக் குடியரசு தலைவரிடம் அளித்தனர். பின்னர், சிஏஏ, என்சிஆா், என்பிஆா் ஆகியவற்றை மத்திய அரசு கைவிடச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர், அங்க செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:
சிஏஏ, என்பிஆா், என்சிஆா் ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டன. அவற்றை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளை எடுத்துரைத்தோம். இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 21 ஆகியவற்றுக்கு எதிரானது. சர்வதேச அமைப்புகளில் கடைப்பிடிக்கப்படும் நியாயங்களுக்கு எதிரானது என்பதையும் எடுத்துரைத்தோம். இதுபற்றி கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.