அவிநாசியில் லாரியுடன் கேரள பேருந்து மோதி விபத்து 20 பேர் பலி, பலர் காயம்..

by எஸ். எம். கணபதி, Feb 20, 2020, 11:41 AM IST

அவினாசி அருகே கேரள சொகுசு பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் அதே இடத்தில் பலியாயினர். விபத்து நடந்த பகுதிக்கு கேரள அமைச்சர்கள் 2 பேர் விரைந்துள்ளனர்.



பெங்களூருவில் இருந்து கொச்சினுக்குக் கேரள அரசு சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் பேருந்து, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, டைல்ஸ் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியுடன் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 20 பயணிகள் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கப் பாலக்காடு மாவட்ட ஆட்சியரை உடனடியாக அங்குச் செல்லுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பாலக்காடு ஆட்சியரும், கேரள போக்குவரத்து அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் மற்றும் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோரையும் அங்குச் செல்லுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களும் விபத்து நடந்த திருப்பூருக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருக்கிறார்.

You'r reading அவிநாசியில் லாரியுடன் கேரள பேருந்து மோதி விபத்து 20 பேர் பலி, பலர் காயம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை