ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு இப்படத்திற்காக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
இதற்காகப் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ராட்சத கிரேன்களில் விளக்குகள் பொருத்திப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 4 ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. கிரேனை ராஜன் என்பவர் இயக்கினார். நேற்று இரவு 11 மணி அளவில் மும்முரமாகப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்துவிட்டுச் சென்றபிறகு அடுத்த காட்சிக்காகத் தளத்தை தயார்ப்படுத்திக்கொண்டிருந்தனர். இதில் உதவி இயக்குநர்கள், உதவியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு ராட்சத கிரேனில் கட்டப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கம்பி முறிந்து கிரேன் அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா, சந்திரன், மது என 3 பேர் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் கிருஷ்ணா, மது உதவி இயக்குநர்கள் ஆவர். குறிப்பாகக் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார்.
படக் குழுவைச் சேர்ந்த அருண்பிரசாத், குமார், கலைசித்ரா, மான்சிங், வாசு, ரம்ஜான், திருநாவுக்கரசு, முருகதாஸ், குணபாலன் ஆகிய 9 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணபாலன் என்பவர் தலையில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த இடத்துக்கு பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கிரேன் இயக்குநர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.