டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் டெல்லியில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், மத்திய, டெல்லி மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
டெல்லியில் கடந்த 23ம் தேதியன்று பாஜக தலைவர்கள் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்பூட்டும் வகையிலும் பேசியிருக்கின்றனர். இதற்கு பிறகுதான் டெல்லியில் கல்வீச்சு, வன்முறை உள்ளிட்ட கலவரங்கள் நடந்துள்ளன. காவல்துறையை வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி மாநில அரசும் உடனடியாக செயல்படாமல் போனதால், கலவரம் வெடித்திருக்கிறது. இந்த கலவரத்தைத் தடுக்க முடியாமல் போனதற்கு உள்துறை அமைச்சகம்தான் காரணம். எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் சிஏஏ போராட்டம் குறித்து மத்திய உளவு அமைப்புகள் என்ன அறிக்கை கொடுத்திருக்கின்றன? டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், இயல்பாக நடந்தவையா? அல்லது உள்துறை இணை அமைச்சர் சொன்னது போல், தூண்டி விட்டு நடந்தவையா? கடந்த 23ம் தேதி ஞாயிறன்று மாலையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை ஏற்படும் சூழல் தெரிந்தும் ஏன் அதிக அளவில் காவல்துறையினர் அங்கு அனுப்பப்படவில்லை? ஞாயிறன்று இரவில் எத்தனை காவல்துறையினர் பணியிலிருந்தனர்? ஏன் கூடுதல் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை? ஞாயிறன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எங்கே சென்றார்கள்? இத்தனை கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். கலவரங்களைத் தடுக்காமல் போனதற்கு உள்துறை அமைச்சகமும், டெல்லி மாநில அரசும்தான் காரணம் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.