டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர், கட்சித் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. பாஜக தலைவர்கள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்கள். வேண்டுமென்றே மக்களிடையே பீதியையும், வெறுப்புணர்வையும் தூண்டி விட்டார்கள். இந்த சதிச் செயல்களை நாம் டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போதும் பார்த்தோம்.
டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும். கடந்த ஞாயிறன்று வன்முறை தொடங்கியதில் இருந்து 72 மணி நேரமாக டெல்லி காவல்துறையே முடங்கிப் போயிருந்தது. போதிய அளவு போலீசார் பாதுகாப்புப் பணியில் இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறைகளில் ஒரு தலைமைக் காவலர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில், மக்கள் அமைதி காக்கக் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.