டெல்லி கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத்துடன் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்குப் போட்டியாக சிஏஏ ஆதரவு போராட்டங்களை பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா நடத்தினார். இதன்பின், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவு பிரிவினரிடையே மோதல் வெடித்தது.
டெல்லியில் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. 5 நாட்களாக நடைபெற்ற வன்முறைகள் நேற்று(பிப்.27) ஓய்ந்தன. கலவரம் பாதித்த இடங்களில் அமைதி திரும்பினாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
டெல்லி கலவரங்களில் நேற்று வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வன்முறைகள் குறித்து விசாரிக்க டெல்லி காவல் துறை 2 சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை நியமித்துள்ளது. இது வரை 48 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 130 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், 510 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில் 7000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், டெல்லியில் சகஜ நிலை திரும்பியுள்ளது.
இதனிடையே, கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், வீடு, கடைகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்து மாமூல் நிலையைக் கொண்டு வர 18 ஆர்.டி.ஓ.க்களை டெல்லி அரசு நியமித்துள்ளது.