டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம்கள் ஆங்காங்கே தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஷாகின்பாக் போராட்டத்திற்கு எதிராக பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா தலைமையில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 47 பேர் பலியாயினர்.
இந்நிலையில், டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். ஆனால், பாஜக இதைப் பொருட்படுத்தவில்லை. இதற்கிடையே, கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தான் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.
டெல்லி கலவரச் செய்திகளைத் திசை திருப்புவதற்காகவே மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே கொரோனா பீதியை கிளப்பி விடுகிறது என்று திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார். மேலும், டெல்லி கலவரத்தில் 47 பேர் உயிரிழந்ததைச் சாதாரண விஷயமாகக் காட்டுவதற்கு பாஜக முயல்வதாக மற்ற கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நானும், எனது அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை. வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்த கவலையால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை வரும் 10ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.