டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அரசியல் சட்டத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறி, அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம்கள் தர்ணா போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த வாரம், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் 31 முஸ்லிம்கள் உள்பட 48 பேர் உயிரிழந்தனர். பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவர் தூண்டி விட்டதால்தான் இந்த கலவரம் தொடங்கியது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. ஆனால், ஆளும் பாஜக அரசு அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். டெல்லி வன்முறைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.