மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக சஞ்சய் கோத்தாரியை நியமனம் செய்ததை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட நியமனக் குழுவே மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு(விஜிலென்ஸ்) ஆணையர் பதவிக்கு ஒருவரை முடிவு செய்யும். இந்த பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிப்பார்கள். அந்த விண்ணப்பங்களை அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழு பரிசீலித்து தகுதி படைத்தவரைப் பிரதமர் தலைமையிலான குழுவுக்கு அனுப்பும்.
தற்போது ஜனாதிபதியின் செயலாளராக உள்ள சஞ்சய் கோத்தாரியை அடுத்த விஜிலென்ஸ் கமிஷனராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சஞ்சய் கோத்தாரி நியமனம் முற்றிலும் சட்டவிரோதமானது. அவர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவரது தகுதி குறித்துத் தேர்வுக் குழு பரிசீலிக்கவே இல்லை. அவரும் அந்த பதவிக்குத் தான் போட்டியிடுவதாக ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை. இந்நிலையில், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அவரை தேர்வு செய்தது சட்டவிரோதம். இதற்குப் பிரதமரிடம் குழுக் கூட்டத்திலேயே காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன்.
அப்படியிருந்தும் அவரை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஜனாதிபதி உத்தரவு என்பதை அவரது செயலாளர் மூலம்தான் பிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் சஞ்சய் கோத்தாரியை மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக நியமித்து அவரே உத்தரவு வெளியிட்டிருக்கிறார். எனவே, விஜிலென்ஸ் கமிஷனர் நியமனத்தை ரத்து செய்து, நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி வேறொருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.