எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியதால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கடந்த 3ம் தேதி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகம்(திருப்பதி திருமலா தேவஸ்தானம்) அந்த வங்கியில் போட்டு வைத்திருந்த ரூ.1300 கோடி டெபாசிட்களையும் முன்கூட்டியே எடுத்து விட்டதால், அவை தப்பி விட்டது. அதே சமயம், ஒடிசா மாநிலம், பூரி ஜெகன்னாதர் கோயிலின் டெபாசிட் ரூ.545 கோடி அந்த வங்கியில் மாட்டிக் கொண்டது.
இதையடுத்து, பணத்தைத் திருப்பி கொடுக்க உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பூரி ஜெகன்னாதர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ஜெகன்னாத் கோயில் நிர்வாகக் குழுவினர், பூரியில் உள்ள எஸ் பேங்கில் கோயிலின் ரூ.545 கோடியை டெபாசிட் செய்துள்ளனர். அடிப்படை நிதி, காணிக்கை என்று கோயிலின் பல்வேறு நிதிகளையும் சேர்த்து இப்படி டெபாசிட் செய்துள்ளனர். இந்த டெபாசிட்டுகள் மார்ச் மாதத்துடன் முதிர்வடைகிறது. எனவே, அவற்றைத் திருப்பி கொடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியிருக்கிறார்.