எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியதால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கடந்த 3ம் தேதி கட்டுப்பாடு விதித்துள்ளது.
அந்த வங்கியில் பணம் போட்டிருந்த சாதாரண மக்கள் கடும் கோபத்துடன் அரசைத் திட்டியபடி, வங்கிக் கிளைகளுக்குப் படையெடுத்துச் சென்று பணத்தைத் திருப்பி எடுக்க முயல்கின்றனர். இதற்கிடையே எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை மத்திய அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது.
இந்நிலையில், ராணா கபூருக்கும் யாருக்கும் நெருங்கிய தொடர்பு, எப்படி பேங்க் திவாலானது என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட செய்தியில், முறைகேடு செய்யும் தொழிலதிபர்களுக்கும் காந்தி குடும்பத்தினருக்கும்தான் நெருங்கிய தொடர்பு உண்டு. சோனியா காந்திக்கு எப்போதும் விமானம் அனுப்பி வந்த விஜய் மல்லையா தப்பியோடி விட்டார். அவருடன் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்.
வங்கி மோசடியில் தப்பியோடிய நிரவ் மோடியின் ஜுவல்லரி கடையைத் திறந்து வைத்தவர் ராகுல்காந்தி. அதே போல், பிரியங்கா காந்தியின் ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கியவர் ராணா கபூர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பாஜக எப்போதும் தனது தவறுகளை மறைப்பதற்குத் திசை திருப்பும் வேலையில் இறங்கும். 2014 மார்ச் மாதத்தில் எஸ் பேங்க்கின் வராக் கடன்கள் ரூ.55 ஆயிரம் கோடிதான். ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது ரூ.2 லட்சத்து 41,49 கோடியாக வராக்கடன்கள் உயர்ந்திருக்கிறது. அதாவது, 2016ல் வராக் கடன்கள் ரூ.98,210 கோடிகளாக இருந்தது, 2018ல் நூறு சதவீதம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 3534 கோடியாக உயர்ந்தது எப்படி? பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தூங்கிக் கொண்டிருந்தார்களா? அவர்கள் இதைக் கவனிக்கத் தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.