பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு

by எஸ். எம். கணபதி, Mar 12, 2020, 12:44 PM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. குவாலியர் சிந்தியா மன்னர் பரம்பரையில் வந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதன்பிறகு, அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், கமல்நாத் அவரை பொருட்படுத்தவே இல்லை.
வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதையடுத்து, காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாகச் சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார். இதையடுத்து, பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா சேர்ந்தார். அவருக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்பட்டது. மொத்தம் 55 இடங்களுக்கு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் சிந்தியா பெயர் இடம் பெற்றது. மேலும், அவர் எம்.பி.யானதும் மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மற்ற வேட்பாளர்கள் வருமாறு:
அசாமில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் கலிதா, பீகாரில் விவேக் தாக்குர், குஜராத்தில் அபய் பரத்வாஜ், ரமீலாபென், ஜார்கண்டில் தீபக் பிரகாஷ், மணிப்பூரில் லேசிம்மா, மகாராஷ்டிராவில் உதயன்ராஜே போஸ்லே, ராஜஸ்தானில் ராஜேந்திர கெலாட் ஆகியோரும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, பிஸ்வாஜித் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை