சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை மண்ணடியில் 27வது நாளாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உங்களை நான் முன்கூட்டியே வந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் லேட்டாக வந்திருக்கிறேன். ஏன் என்றால், எங்களைப் போன்றவர்கள் உங்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாக ஒரு தவறான பிரச்சாரத்தைப் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்றுதான் கூடுமான வரையில் தவிர்த்துக் கொண்டு வந்தேன். நான் தவிர்த்திருந்தாலும், திமுகவினர் பலர் உங்களை வந்து சந்தித்தார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஏறக்குறைய 27 நாட்களாக இந்த மண்ணடி பகுதியில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன், ஒருமித்த கருத்துடன், உறுதியுடன் மிகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டம் மண்ணடி பகுதியில் மட்டுமல்ல. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஏன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தப் போராட்டம் பல்வேறு கோணங்களில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக, உண்ணாவிரதப் போராட்டமாக, பேரணியாக, ஆர்ப்பாட்டமாக, கண்டனக்கூட்டங்களாக, மனிதச் சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி சிஏஏ என்ற இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலமாக என்.பி.ஆர்., என்.ஆர்.சி. என்கிற சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மட்டும் ஏற்பட்ட இன்னல்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட துன்பம். பொதுவாக முஸ்லீம்களுக்காக, இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
மக்களவையைப் பொறுத்தவரையில், பா.ஜ.க. அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதனால் அந்தத் தீர்மானம் எளிதாக அங்கு நிறைவேறிவிடும். அந்த சபையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். இருந்தாலும், பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலிருந்த காரணத்தினால் அங்கு வெற்றி பெற்றது. ராஜ்ய சபாவில் வெற்றி பெற்றால்தான் சட்டம் நிறைவேறும். ராஜ்யசபாவைப் பொறுத்த வரையில், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடையாது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தால் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க வெற்றி பெற முடியாது. திமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அதிமுகவைச் சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேர். பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உட்பட 12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த 12 உறுப்பினர்களும் ராஜ்யசபாவில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. ஆனால், ஆதரித்து வாக்களித்ததனால் இந்தச் சட்டம் நிறைவேறி விட்டது. அதுதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை. இந்தக் கொடுமை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் மிகப்பெரிய கொடுமையை, அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். இந்தத் துரோகத்தைச் செய்த அவர்களை நாம் சும்மா விடலாமா? அதனால் தான் இந்தப் பிரச்சனை இன்று உருவாகியிருக்கிறது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், தமிழ்நாட்டில் திமுக தான் முதலில் குரல் கொடுத்தது. திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். முதன்முதலில் இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தியது நாம்தான். அதன்பிறகு பல மாநிலங்களில் பேரணி, போராட்டங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கியது. கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 8 நாட்கள் நடந்தது. ஒருகோடி கையெழுத்தை வாங்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். மக்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்துப் போடுகிறோம் என்று எல்லாத் தரப்பு மக்களும் நம்முடைய நாட்டிற்கு ஆபத்து என்று அவர்களே மனமுவந்து இரண்டு கோடி பேர் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். அதையும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக டெல்லிக்கு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை என்று கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய பேரணியை நடத்தி, இரண்டு கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருக்கிறோம். இருந்தாலும் நாம் போராட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய போது, இது குறித்து விவாதித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் என்று கடந்த கூட்டத் தொடரில் எழுதிக் கொடுத்தேன். கூட்டம் தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் நான் எழுந்து கேட்டதற்கு, ஆய்வில் இருக்கிறது, ஆய்வில் இருக்கிறது என்று சபாநாயகர் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். நான்கு நாட்கள் சட்டமன்றம் நடந்தது.
அதன்பிறகு மீண்டும் சட்டமன்றம் கூடியிருக்கிறது. இன்று சட்டமன்றம் தொடங்கியவுடன், நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி எழுந்து கேட்டேன். அனுமதித்தார். உடனடியாக நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும். இன்றைக்கு மண்ணடியில், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் காலையிலிருந்து இரவு வரை போராட்டங்கள் நடந்தாலும் வண்ணாரப்பேட்டையிலும் 24 மணி நேரமாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு இருக்கிறார்கள். எனவே அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று அழுத்தம் திருத்தமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேரும் சொல்லி வருகிறார்கள்.
அது மட்டுமல்ல. இன்றைக்கு பாஜகவில் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்சிகளைச் சார்ந்த முதலமைச்சர்கள் பல மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவர்கள் தான். ஏறக்குறைய 13 மாநிலங்களில் இந்த தீர்மானத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாஜகவின் கூட்டணியில் இருக்கக்கூடியவர். நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தவர். ஆனால் எங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்து தீர்மானம் போட்டிருக்கிறார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற கட்சிகளும்கூட, 'எங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம். இது கொடுமையான சட்டம். இது மக்களைப் பாதிக்கும் சட்டம், மக்களை வஞ்சிக்கும் சட்டம். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம்' என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அ.தி.மு.க அந்தப் பாவத்திற்காகவாவது என்ன செய்திருக்க வேண்டும்? அதற்காகவாவது இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இல்லையா? அதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. 'சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கண்டித்து நாங்களும் எங்கள் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் வெளிநடப்பு செய்துவிட்டு, வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு மீண்டும் சட்டமன்றத்துக்குச் சென்றோம்.இந்த ஆட்சியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது. காரணம், இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் என்ன நடக்கும்?
முதலமைச்சர் ஒரு கடிதத்தை அமித்ஷாவிடம் அளித்தார்கள். முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை அமித்ஷா வாங்கி பிரித்துக் கூட படிக்கவில்லையாம். அதற்கு அங்குச் சென்றவர்கள், தீர்மானம் இயற்றப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் தீர்மானம் மட்டும் போட்டீர்கள் என்றால் நீங்கள் அத்தனை பேரும் ஜெயிலில் இருப்பீர்கள். ஊழல் வழக்குகள், சிபிஐ வழக்குகள் என மிரட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் எப்படிப் போனாலும் பரவா இல்லை நாம் ஜெயிலுக்கு போகக்கூடாது என்கிற எண்ணத்திலேதான் இந்த ஆட்சி அஞ்சி நடுங்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆக இதைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆக நான் உங்களை எல்லாம் பணிவோடு உரிமையோடு வேண்டிக் கேட்டுக் கொள்ள விரும்புவது ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்தப் போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த போராட்டத்தை நீங்கள் தள்ளிவைத்துவிட்டு ஏப்ரல் 1 முதல் கணக்கெடுப்பு எடுக்க வரும்போது யாருமே அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் திமுக உங்களுக்குத் துணைநிற்கக் காத்திருக்கிறது என்கிற அந்த அன்பான வேண்டுகோளை எடுத்து வைக்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.