45 வயசுல வராத முதல்வர் ஆசை 70 வயசுல வருமா? ரஜினி பேட்டி

by எஸ். எம். கணபதி, Mar 12, 2020, 13:01 PM IST

தனக்கு முதலமைச்சர் பதவிக்கு வரும் ஆசையே கிடையாது என்று ரஜினி உறுதியாகக் கூறி விட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இது பற்றி 1996ம் ஆண்டிலேயே தெரியும். நான் நினைத்திருந்தால் அப்பவே முயற்சி பண்ணியிருக்கலாம். 45 வயசிலேயே பெயர், புகழ், எல்லாம் பார்த்து விட்டேன். அப்பவே எனக்குப் பதவி ஆசை இல்லை. அப்ப வராத ஆசையா இப்ப 68 வயசுல வரப் போகுது? இதை ஏற்கனவே நான் 2017ல் பேட்டி அளித்த போதே சொல்லியிருக்கிறேன்.

தேசியக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளில் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைவர்தான். அதனால் 5 ஆண்டுகளுக்கு மக்கள் கேள்வி கேட்கவே முடியாது. கட்சியில் யாராவது கேட்டால் அவர்களைக் கட்சித் தலைமை நீக்கி விடும். அதனால்தான், கட்சிக்குக் கொள்கைகளை வகுத்து ஒரு குழுவை ஏற்படுத்தி கட்சியை வழிநடத்த வேண்டும் என்கிறேன். முதலமைச்சராக ஒரு இளைஞர் திறமையானவராகப் படித்தவராக, அன்பு, பாசம், தன்மானம் உள்ளவராகத் தேர்ந்தெடுத்து உட்கார வைப்போம். கட்சித் தலைவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல் ஆட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.

முதலமைச்சரின் அன்றாட பணிகளில் கட்சித் தலைமை தலையிட மாட்டோம். ஆட்சியில் இருப்பவர்கள், இந்த பிறந்த நாள், நினைவு நாள் இதையெல்லாம் பார்க்க வேண்டாம். அதை எல்லாம் கட்சி பார்த்துக் கொள்ளும். இதுதான் எனது திட்டம். ஜனங்களுக்கு இதில் நம்பிக்கை வர வேண்டும்.

என்னை முதல்வராகச் சொல்லி 1996ம் ஆண்டே பிரதமர்(நரசிம்மராவ்) 2 முறை கூப்பிட்டுப் பேசினார். சிதம்பரம் பேசினார். அப்போதே நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். மாற்று அரசியல் வேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதை 2021ம் ஆண்டு தேர்தலில் கொண்டு வர வேண்டும். இந்த முறை வராவிட்டால் இனி எப்பவுமே வராது. இப்பவே எனக்கு 70 வயசு. பிழைச்சு வந்திருக்கிறேன். இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு முடியுமா?
இவ்வாறு ரஜினி பேசினார்.

You'r reading 45 வயசுல வராத முதல்வர் ஆசை 70 வயசுல வருமா? ரஜினி பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை