கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, வரும் 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உலகில் 135க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 150க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(மார்ச்19) தொலைக்காட்சியில் பேசினார். அவர் பேசியதாவது:
உலகில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 130 கோடி இந்தியர்களும் இந்த கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கிருமி பரவாமல் கட்டுப்படுத்த மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
முதலாவது, 2வது உலகப் போர்க் காலத்தில் கூட இத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டதில்லை. இப்போது கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற தொற்று நோய் பரவும் காலத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும், சுத்தமாகவும் இருந்தால், உலகம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.
கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கு அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்க் கிருமி வராமல் இருக்கத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவமனைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
இந்த நோயிலிருந்த தற்காத்துக் கொள்வதற்கு ஒரே வழி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான். எனவே, இன்னும் சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், குழந்தைகளும் வெளியே வரக் கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். வியாபாரம் மற்றும் பணிகளை வீட்டிலிருந்தவாறே செய்யுங்கள். வழக்கமாக, மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதோடு, பொது நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும்.
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும். வரும் 22ம் தேதியன்று மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும். அன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்று மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்று வீட்டுக்குள் இருந்தபடி அல்லது பால்கனியில் நின்றபடி கைகளைத் தட்டி ஒலி எழுப்ப வேண்டும். அல்லது, மணி அடித்து கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும் ஊழியர்களுக்கு மக்கள் தங்கள் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள், அன்று மாலை 5 மணிக்குச் சங்கு ஊதி, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த மக்கள் ஊரடங்கு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களைச் சந்திப்பதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றி அடுத்து 2 நாட்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதே சமயம், அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு ஒழுங்காகக் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். உணவுப் பொருட்கள், பால், மருந்து பொருட்களின் சப்ளை நிறுத்தப்பட மாட்டாது. உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். எனவே யாரும் பீதி அடையவேண்டாம். பொருட்களை வாங்கி யாரும் பதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்பவர்கள் கூடுமானவரை அதைத் தவிர்க்க வேண்டும். அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளைத் தள்ளி வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகப் பொருளாதார ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் தலைமையில் பொருளாதார மீட்பு பணிக்குழு அமைக்கப்படும். இந்த குழு சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுக்கும்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் வேலைக்கு வராவிட்டாலும் அவர்களுக்கு உரியச் சம்பளத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.