குடிநீர், மின்கட்டண வசூல்.. நிறுத்தி வைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 16:19 PM IST

கொரோனா பாதிப்பு காரணமாக வரி மற்றும் குடிநீர், மின்கட்டண வசூல்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதையொட்டி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதை, நாம் உணர்கிறோம். அதனால் வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது. இதை ஒரு 'பொருளாதார எமர்ஜென்சியாக' பிரிட்டன் அறிவித்து 'பிசினஸ் பேக்கேஜ்' என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அங்கிருக்கும் சிறு தொழில்களுக்கு ரொக்க மானியம் வழங்குவதாக, குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல, தொழில்களுக்கு மானியம் அளிக்கப்படும் என்றும், வரி, வாடகை, குடிநீர், மின் மற்றும் சமையல் எரிவாயு கட்டணங்கள் வசூல் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அந்த நாடு அறிவித்துள்ளது.
சம்பளம் வழங்குதல், வரிச் சலுகை போன்ற 'மீட்பு பேக்கேஜ்களை' நியூசிலாந்து அறிவித்திருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகளை அதிகரிப்பது, சிறு தொழில்கள் கம்பெனிகளுக்கு ஆதரவு அளிக்கும் சலுகைகள், வரி கடன் செலுத்துவதற்குக் கால அவகாசம், போன்றவற்றை இத்தாலி நாடு அறிவித்திருக்கிறது. தொழில்கள் வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பாதுகாக்க வரம்பில்லாத கடன் வழங்கும் முறையை ஜெர்மனி அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் ஒடிசா மாநில அரசு, கொரோனா பரவுவதைத் தடுக்க ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது. வெளிநாடு சென்று வந்தவர்கள் தாங்களாகவே அரசிடம் பதிவு செய்து கொண்டு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆகவே, இந்த மாதிரிகளை நம்முடைய தமிழக அரசும் கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார, பொதுச் சுகாதார பாதிப்புகளைத் தடுக்க வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading குடிநீர், மின்கட்டண வசூல்.. நிறுத்தி வைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை