முதல்வர் சொல்வதும் ஒன்றும், அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா பீதி மற்றும் அச்சத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் பீடிக்கப்பட்டிருக்கும் போது, சட்டமன்றம் தொடர்ந்து நடப்பது நல்லதல்ல... ஒத்திவையுங்கள் என்று எழுந்த கோரிக்கையை முதல்வர் வழக்கம்போல ஆவேசமாக நிராகரித்திருக்கிறார்.
ஆனால், அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர் ஒருவரே, என்னைப் பொதுமக்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று எழுதி வைக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதையும் மறுக்க இயலாது.
சமீப காலமாகவே முதல்வர் சொல்வது ஒன்றும் அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட கொரோனா வைரஸ் விஷயத்திலும் இந்த விளையாட்டைத் தொடராமல், எது அவசியமோ அதை ஒருங்கிணைந்து முடிவெடுத்து அமல்படுத்தும்படி பழனிசாமி அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.