கொரோனா பற்றி மோடி மீண்டும் உரையாற்றுகிறார்.. இரவு 8 மணிக்கு பேசுவார்

by எஸ். எம். கணபதி, Mar 24, 2020, 12:35 PM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தொடும் நிலையில், நோய் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 498 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர், கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு பின்பற்றுமாறு கூறினார். அதன்படி மக்கள் கடைபிடித்தனர்.இதைத் தொடர்ந்து, கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றுகிறார்.

அப்போது, தடையுத்தரவால் பாதிக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அவர் அறிவிப்பார் எனத் தெரிகிறது.


Leave a reply