தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல். போக்குவரத்து முடக்கம்.. எவையெவை செயல்படும்?

Tamilnadu govt. imposes total ban order till march 31

by எஸ். எம். கணபதி, Mar 24, 2020, 12:27 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று(மார்ச் 24) மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ உள்பட வாகனப் போக்குவரத்துகள் தடை செய்யப்படும். மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இது வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், 12,519 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோன வைரஸ் பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த தடை உத்தரவு அமலில் உள்ள போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். அதன் விவரம் வருமாறு:

மார்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தினமும் கண்காணிப்பார்.

மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே வரலாம். அப்போதும் மற்றவர்களுடன்் 3 அடி தூர இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுகிறது.

கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை மூடப்படும்.

தனியார் பஸ்கள், ஒப்பந்த வாகனங்கள், மெட்ரோ ரயில்கள், டாக்சி, ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படும். பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் போக்குவரத்து சேவை கிடையாது.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரும் 31ம் தேதி வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்றவேண்டும்.
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நடத்தும் விடுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலாதலங்கள் அனைத்தும் செயல்படாது.

அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.

இன்று பிளஸ்-2 வேதியியல் பொதுத் தேர்வு நடைபெறும். வரும் 26-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும், அரசு பணிக்கான தேர்வு நடவடிக்கைகளும் தள்ளிவைக்கப்படுகின்றன.

கடந்த 16ம் தேதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமணங்கள், அந்தந்த திருமண மண்டபத்தில் அதிகபட்சம் 30 பேர் கலந்துகொள்ளும் வகையில் நடத்திக் கொள்ளலாம். திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு செய்து, அது ரத்து செய்யப்படும்பட்சத்தில் அந்த தொகையை உரிமையாளர்கள் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் 044-29510400, 29510500, 9444340496, 8754448477 என்ற அரசு கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை