கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் இன்று காலை வரை 656 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 15 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் 21 நாள்கள் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம். இந்த நிலையில், மக்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கி இருப்பதால், ஏழை நடுத்தர மக்களுக்கு பொருளாதாரப் பாதிப்புகளை கலைக்க வேண்டும். எனவே, கடன் தவணைகளை 6 மாதத்திற்கு வசூலிக்கக் கூடாது. மேலும், கடன்தொகைக்கான 6 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். வேலையிழந்த ஏழை மக்களுக்கு நேரடியாக வங்கிகளில் உதவித் தொகை அனுப்ப வேண்டும்.
அதே போல், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர், கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும். மேலும், 10 கிலோ கோதுமை இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.