டெல்லி முஸ்லிம் மத மாநாட்டில் பங்கேற்ற 700 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டின் மூலம் பலருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 15ம் தேதியையொட்டி, தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அமைப்பின் ஆறு மாடிக் கட்டிடத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரே உணவுக் கூடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார்கள்.
இதனால், சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் கொரோனா வைரஸ், டெல்லி பிரதிநிதிகளுக்கும் பரவியிருக்கிறது. தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டெல்லி அரசும், காவல் துறையும் நிஜாமுதீன் பகுதியில் தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர். மாநாட்டில் பங்கேற்ற 1500 பேரைக் கண்டறிவதற்காகச் சோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இதில் 700 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 333 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது வரை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் இந்திய விசா விதிமுறைகளை மீறி, விசா பெற்று வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதை உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.