மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி புரியும் புதிய வகை ரோபோக்களை ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. உடல் கவசம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் போதிய அளவுக்கு இல்லாததால், இவர்களுக்கும் எளிதில் கொரோனா தொற்று பரவிவிடுகிறது.
இதையடுத்து, டெல்லி ஐ.ஐ.டி உள்பட பல்வேறு நிறுவனங்களும், கொரோனா நோயாளிகளுக்கு அருகில் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் அடிக்கடி செல்வதைத் தவிர்க்கப் பல ரோபோக்களை வடிவமைத்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கிளப் பர்ஸ்ட் என்ற நிறுவனம், புதிய வகை ரோபோக்களை தயாரித்து விற்று வருகிறது.இந்த கம்பெனி நிர்வாக இயக்குனர் புவனேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், இந்த ரோபோக்கள், நோயாளிகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று அளிக்கும். அத்துடன், ஒருவருக்குக் காய்ச்சல் உள்ளதா என அறியும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்வது, உள்ளே வருபவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்று கண்காணிப்பது போன்ற பணிகளையும் இந்த ரோபோக்கள் செய்யும் என்றார்.