தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. சென்னையில் அதிகபட்சமாக 5946 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது.
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேர், குஜராத்திலிருந்து வந்த 2 பேர், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரும் அடங்குவார்கள்.இவர்களுடன் சேர்த்து மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 359 பேரையும் சேர்த்து 2599 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 10,883 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 90,906 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் நேற்று 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5946 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, நேற்று செங்கல்பட்டில் 20 பேர், திருவள்ளூர் 21, காஞ்சிபுரம் 11, தேனி, மதுரை தலா 6, கடலூர் 3 மற்றும் தென்காசி, விருதுநகர், தர்மபுரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பாதித்தவர்களில் தினமும் 70, 80 பேர் குணமடைந்து வந்தனர். ஆனால், நேற்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.