சீனாவுடன் எல்லைப் பிரச்சனை காரணமாகப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுப்பதற்காகச் சீன படைகள் வேண்டுமென்றே இந்தியப் படைகள் மீது மோதலை தொடங்கின. இதையடுத்து, கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ட்விட் போட்டார். அதில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாகவும், இதை இருநாடுகளுக்கும் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களை நேற்று சந்தித்த போது, இந்தியா, சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதால் இந்தியா கவலையாக இருக்கிறது. சீனாவும் கவலையாக இருக்கிறது. பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் இந்த சீன விவகாரத்தால் நல்ல மனநிலையில் இல்லை என்று கூறினார்.