பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி புகழ் நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் 24-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருப்பதாக அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பஞ்சாப் நேசனல் வங்கியில், ரூ. 12 ஆயிரத்து 682 கோடி அளவிற்கு மோசடி செய்த, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி மோடி, உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோரை இந்தியா கொண்டு வர சர்வதேச போலீசின் உதவியை சிபிஐ அதிகாரிகள் நாடியுள்ளனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேசஷனல் வங்கி அதிகாரிகள் மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் அதிகாரிகள் என 18 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
தவிர, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸிக்கு சொந்தமான சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் பணியில் இறங்கிய அதிகாரிகள், வெளிநாடுகளில் நீரவ் மோடிக்கு இருக்கும் சொத்துக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர்.
இதில், நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் 24-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் மட்டும் நீரவ் மோடிக்கு 6 நிறுவனங்கள் உள்ளன. இதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நிறுவனங்கள் உள்ளன.
நீரவ் மோடிக்கு தில்லி, மும்பை, ஹாங்காங், பெய்ஜிங், சிங்கப்பூர், லண்டன், நியூயார்க், லாஸ்வேகாஸ் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய ஷோரூம்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் அவர், பெரிய ஷாப்பிங் மால்கள் தொடங்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
வங்கிகளில் கடன்பெற்று மோசடி செய்த பணத்தில், அவர் சட்ட விரோதமாக 120 போலி நிறுவனங்களைத் தொடங்கி இருப்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்து உள்ளது. இதில் 79 நிறுவனங்களுக்கு மெகுல் சோக்ஸி இயக்குநராக இருந்துள்ளார். மீதியுள்ள 2 நிறுவனங்கள் நீரவ் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளன.