எல்லையில் ஆகாஷ் ஏவுகணை.. தயார் நிலையில் விமானப்படை.. சீனாவுடன் போர் பதற்றம் நீடிப்பு..

India moves air defence missile systems into Eastern Ladakh sector.

by எஸ். எம். கணபதி, Jun 28, 2020, 10:17 AM IST

லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த மாதம் சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. கிழக்கு லடாக்கில் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன.

இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், எல்லையில் மோதலை தவிர்த்துப் பின்னோக்கி செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா மீண்டும் ஊடுருவலை ஆரம்பித்தது. பங்காங் ஏரிப்பகுதியில் கூடாரங்களை அமைத்து ஆக்கிரமிப்பு வேலைகளில் ஈடுபடத் தொடங்கியது. மேலும், எல்லை கட்டுப்பாடு கோட்டிலிருந்து 10 கி.மீ. சுற்றளவில் சீனப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து ரோந்து செல்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் ரோந்து புள்ளிகளான 14, 15, 17, 17ஏ ஆகியவற்றுக்கு அருகில் அவை சுற்றி வருகின்றன. இதனால், சீன விமானப்படையின் திடீர் தாக்குதல் உள்ளிட்ட எந்த செயலிலும் ஈடுபடுவதைத் தடுக்க இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய ராணுவமும் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வான்வெளி தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது. வானில் சென்று தாக்கும் ஏவுகணைகள், மற்றும் போர் விமானங்களை அப்பகுதிக்கு நகர்த்தி வருகிறது. தரையிலிருந்து வான் இலக்கை குறி வைத்துத் தாக்கும் அதிநவீன ஆகாஷ் ஏவுகணைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஏவுகணைகள், அதிவிரைவாகப் பறக்கும் போர் விமானங்களையும், டிரோன்களையும் சில நொடிகளில் மிகத் துல்லியமாகத் தாக்கி வீழ்த்தும் திறன் கொண்டவையாகும்.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் தற்போது இருநாட்டு விமானப் படைகளும் களமிறங்கியுள்ளதால், போர் பதற்றம் நீடித்து வருகிறது.

You'r reading எல்லையில் ஆகாஷ் ஏவுகணை.. தயார் நிலையில் விமானப்படை.. சீனாவுடன் போர் பதற்றம் நீடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை