இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தான் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு நடத்திய ஆய்வில், மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே போல், மொத்த இறப்புகளில் 87 சதவீதம் இந்த மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 59,123 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. 2வது இடத்தில் டெல்லியில் 80,188 பேருக்கும், அடுத்து தமிழ்நாட்டில் 78,335 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தெலங்கானா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த 8 மாநிலங்களில் இறப்புகளைக் கணக்கிட்டால், அது மொத்த இறப்புகளில் 87 சதவீதமாக உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு மருத்துவக் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. தற்போது நாட்டில் 8958 கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 8 லட்சத்து 10,621 படுக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.