ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் ஊரடங்கு அறிவித்ததாலும், வேறு முக்கியமான முடிவுகள் எடுத்ததாலும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம்.
ஊரடங்கின் முதல் கட்ட தளர்வு அறிவித்ததற்குப் பிறகு மக்களிடம் அலட்சியம் ஏற்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகிய விஷயங்களை ஆரம்பத்தில் மிகவும் கவனத்துடன் கடைப்பிடித்தோம். ஆனால், இப்போது பெரும்பாலான மக்கள் இவற்றை கடைப்பிடிப்பதில்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது.
அதே சமயம், இப்போதுதான் மேலும் அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மக்கள் இவற்றைப் பின்பற்றுவதற்கு, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதிலும் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் 130 கோடி மக்கள் உயிர்களைக் காப்பாற்றும் பணியில், ஒரு ஊராட்சித் தலைவர் முதல் பிரதமர் வரை யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதே அரசின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. ஊரடங்கு அறிவித்தவுடன், பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தில் மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களை அளித்தோம். தொடர்ந்து 3 மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷனில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, 5 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜூலை 5-ம் தேதி குரு பூர்ணிமாவும் அடுத்து ஆவணி மாதத் திருவிழாக்களும் வருகிறது. தொடர்ந்து, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகைகள் வருகின்றன. நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. அதனால், மக்களின் தேவைகளும் அதிகரிக்கிறது.இதைக் கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும். இதற்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும். கடந்த 3 மாதங்களில் செலவழித்த தொகையையும் கூட்டினால் ஒன்றரை லட்சம் கோடி இந்த திட்டத்துக்காகச் செலவழிக்கப்படுகிறது.
ஏழைகளுக்கும் அரசால் இந்த இலவச ரேஷன் பொருட்கள் வழங்க முடிகிறது என்றால், அதற்கு விவசாயிகளும், நேர்மையாக வரி செலுத்துபவர்களுமே காரணம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்தீர்கள். அதனால், ஏழைகள் இந்த கடுமையான நெருக்கடியைச் சமாளிக்க முடிகிறது. வருங்காலத்திலும் கொரோனா தடுப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் அதே நேரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.