உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனை தான் தரும்.. சமக தலைவர் சரத்குமார் வேதனை அறிக்கை..

Sarathukumar Statement against Rumours

by Chandru, Jun 30, 2020, 19:22 PM IST

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையைத் துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்) பத்திரிகை நிருபராகப் பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக. நடிகராக, சமூக சேவகனாக, பிறர் நலம் விரும்பியாக, அரசியல்வாதியாகப் பயணித்த அனுபவத்தில் எழுதுகிறேன்.

தரமான நேர்மையான பத்திரிகை தொலைக்காட்சிகள் இணையதளம் நடுவே ஒரு சில இணையச் செய்திகள் தருகின்ற சகோதரர்களுக்குத் தவறான உண்மையான புறம்பான செய்திகளைக் காட்டு தீ போல் பரப்புவதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி உங்கள் தவறான, ஆய்வு செய்யாத, உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை அவர்கள் அடையும் துயரங்களில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி பரபரப்பாகச் செய்திகள் வெளியிடும் பலரிடம் நம் பதிவு சென்றடைந்து விட்டது, நினைத்ததைச் சாதித்து விட்டோம் ரேட்டிங் உயர்ந்துவிட்டது வசூல் லாபம் என்ற மகிழ்ச்சியில் உங்களுக்கெல்லாம் உணர்வே கிடையாதா? மனசாட்சி என்பதை இறக்கி வைத்து விட்டீர்களா? பேனா முனையின் வலிமையை எதற்குப் பயன்படுத்த வேண்டும், உங்கள் அறிவை ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும் என்ற உணர்வு உங்களைப் போன்றவர்களுக்கு கிடையாதா? உங்களைப்போலப் பதிவிட்ட செய்தி உண்மையா? இல்லையா? எனத் தெரிந்து கொள்ளாமல் சோசியல் மீடியா என்ற சக்தியை ஆயுதத்தை மற்றவர்களும் ஆனந்தத்தோடு பகிர்வது கருத்து தெரிவிப்பது என்ற மஞ்சள் பத்திரிக்கைக்குச் சவாலாக நீங்களும் நீங்களெல்லாம் இருப்பதில் வேதனை அடைகிறேன், வெட்கப்படுகின்றேன்.

நான் என் குடும்பம், என் வாழ்க்கைப் பயணம், உங்களைப் போன்றவர்களுக்குச் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஒருவன் என்று வீழ்வான் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டமாயிற்றே நீங்கள்உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனை தான் தரும். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நினைக்கத்தான் தோன்றும். என் வாழ்க்கையின் சோகங்களை, வேதனைகளை, தாய் தந்தையரின் இழப்பு, சகோதரர் இழப்பு, பொருளாதாரப் பின்னடைவு தோல்விகள் அவதூறுகள், இவைகளெல்லாம் தாங்கி வாழ்க்கை என்பது வாழ்வதற்கு வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதிலும் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப் பட்டு பிறர் வீழ்ச்சியில் அல்ல என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என் பயணத்தின் எல்லை, இலக்கு, இவைகளை நன்கு அறிந்தவன் நான். விடாமுயற்சி தடைக்கற்களை உடைத்தெறியும் வலிமை, என் தமிழ் உறவுகளின் ஆதரவு, என்னை வெற்றி பெறச் செய்யும். பிறர் நலனுக்காக நம் மக்களுக்காக தவறான பதிவுகளுக்கும் செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்தால் அதையும் செய்தியாக்கி பொருளாதார உயர்வு பெற விரும்பும் உங்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியையும் நான் தர விரும்பவில்லை.
சாதி மத மொழி இனம் நிறம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் படைப்போம்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பற்றி சில இணையதளங்களில் வரும் வதந்தி தகவல் அறிந்ததும் அவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை என்று சரத்குமார் தரப்பில் விசாரித்தபோது தெரிவிக்கப்பட்டது.

You'r reading உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனை தான் தரும்.. சமக தலைவர் சரத்குமார் வேதனை அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை