மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக தினமும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. உத்தர்தினாஜ்பூர் மாவட்டத்தில் ஹேம்தாபாத் தனித் தொகுதி எம்எல்ஏவாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திரநாத் ராய் இருந்தார்.
இந்நிலையில், ராஜ்குன்ச் பகுதியில் உள்ள பலியாவில் ஒரு மொபைல் கடையின் உத்தரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, பாஜக எம்.எல்.ஏ.வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டிருப்பதாக பாஜக உள்ளூர் தலைவர் ராகுல்சின்கா குற்றம்சாட்டினார். பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டிவிட்டர் பக்கத்தில், தேவேந்திரநாத் ராய் கொடூரமாகக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் குண்டர் ராஜ்ஜியம் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மம்தா பானர்ஜியின் அரசுக்கு மக்கள் எதிர்காலத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.மேற்கு வங்க போலீசார் தங்கள் டிவிட்டர் பக்கத்தில், எம்.எல்.ஏ. தற்கொலை செய்திருக்கிறார். அவரது சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் 2 பெயர்களைக் குறிப்பிட்டு சில விஷயங்களை எழுதியிருக்கிறார். அது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்குள் கற்பனையாகத் தவறான கருத்துக்களை யாரும் பதிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.