பாமா விஜயம், நீர்க்குமிழி, முகராசி என ஏராளமான தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி படங்கள் என 400 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் மூத்த நடிகை ஜெயந்தி. இவர் கடந்த 7ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.தற்போது ஜெயந்தி உடல் நிலை தேறி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். நடிகைக்கு அளிக்கும் சிகிச்சையில் அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு தருகிறது. ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்புள்ளது.
மூத்த நடிகைக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் சோதனை செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இருப்பினும், பின்னர் அது வதந்தி என்று தெரிந்தது. அவரது மகன் கிருஷ்ணா குமார் கூறும்போது எனது அம்மா திடமானவர். அவரது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.நடிகை ஜெயந்தி கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். 2018 ஆம் ஆண்டில், நடிகை மூச்சுத்திணறல் காரணமாகப் பெங்களூருவுக்கு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.