மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றுவது குறித்து சென்னை ஐகோர்ட் முடிவு செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் டிப்ளமா இடங்களில், 15 சதவீதமும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும். இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(ஓ.பி.சி) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகளும், 27 சதவீத ஒதுக்கீடு கோரி, பா.ம.க.வும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இவ்வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மொத்த ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான தற்போதைய ஒதுக்கீட்டில், எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருக்கிறது என்று கூறப்பட்டது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் வழக்கு விசாரணையை எதிர்பார்த்து, சென்னை ஐகோர்ட்டில் விசாரணையை வரும் 17ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றுவது குறித்து சென்னை ஐகோர்ட் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.