ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த, ராஜுவரிபல்லே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் அருகே உள்ள மதனபள்ளியில் தேநீர்க் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, லாக் டவுனால் கடை நடத்த முடியாமல் போக, கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் ராஜுவரிபல்லே கிராமத்துக்கே வந்துவிட்டார். சொந்த ஊரில் பிழைப்பு நடத்துவதற்காக தனக்கு இருந்த நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்துள்ளார்.இதற்காக பாழ்ப்பட்டு இருந்த தன் நிலத்தைச் செப்பனிட நினைத்தவர் டிராக்டர் கொண்டு உழுவதற்குக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கேட்ட பணம் நாகேஸ்வரராவ்விடம் இல்லை. இதனால் மாடுகளுக்குப் பதிலாகத் தனது மகள்களைக் கொண்டு நிலத்தினை உழத் தொடங்கினார்.
நாகேஸ்வரராவ்வின் இரு மகள்களும் கலப்பையைப் பிடித்துக் கொண்டு உழுது கொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியது. ஊரடங்கால் அவர்களுக்கு நேர்ந்த நிலைமை குறித்து இணையதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் சோனு சூட், அவர்களுக்கு உதவ முன்வந்தார்.இதுதொடர்பாக டிவிட்டரில், ``இந்த குடும்பம் மாடுகள் வாங்க முடியாமல் இருக்கலாம். ஆனால் டிராக்டர் வாங்கத் தகுதியானவர்கள். மாலைக்குள் டிராக்டர் உங்கள் நிலத்தினை உழும்" என்று பதிவிட்டதுடன் சொன்னது போலவே டிராக்டர் வாங்கி அந்தக் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார். திரையில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் மற்ற ஹீரோக்கள் செய்யாத விஷயங்களைச் செய்து வருகிறார் சோனு சூட்.
இதற்கு முன் முதல்கட்ட லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது, மற்ற மாநில மக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தபோது, தனது சொந்த செலவில் சுமார் 20 பேருந்துகளில் தொழிலாளிகளைச் சொந்த செலவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். தற்போது விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதித்து வரும் சோனு சூட்டை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியதுடன், அந்த விவசாயி மகள்களின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளார்.
உண்மையிலேயே சோனு சூட் பாராட்டுக்குரியவர்தான்.... ஹேட்ஸ் ஆஃப் ரியல் ஹீரோ!