கோவிட் 19 தொற்று காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்தியாவில் நான்கு மாதம் ஆகியும் திறக்கப்பட வில்லை. ஆனால் சீனா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் சமீபத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுக் குறைந்த எண்ணிகையிலான நபர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் முடிக்கப்பட்டு பெட்டியில் இருக்கும் புதிய படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கலாம் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரை அனுப்பி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் 25 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தியேட்டர்களை திறக்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இது எந்தளவுக்கு தியேட்டர்காரர்களை கவரும். டிக்கெட் விலை அதிகப்படுத்தினால் மட்டுமே ஓரளவுக்காவது கட்டுபடியாகும் என்ற நிலை உருவானால் அதற்கு ரசிகர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் தியேட்டர் திறப்பு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே தெரிய வரும்.