இந்தியாவில் மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பு வேறு விளையாட்டுகளுக்கு கிடையாது என்பது அனைவரும் அறிந்தது. இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் அனைவரும் கோடிகளில் புரள்கின்றனர். அதுபோக பிசிசிஐ சார்பில் பல்வேறு வசதிகள் வேறு. முன்பைவிட ஐபிஎல் வந்த பிறகு இது இன்னுமும் அதிகமானது. ஆனால் இது அனைத்தையும் இந்திய ஆண்கள் அணியினர் மட்டுமே அனுபவிக்கின்றனர். மகளிர் அணியினரோ, மாற்றுத்திறனாளி அணிகளோ இதற்கு விதிவிலக்கு. இதில் விளையாடும் பல வீரர்கள் வாழ்வாதாரத்துக்காகக் கஷ்டப்படும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் தினேஷ் குமார் செயின். ஹரியானாவைச் சேர்ந்த இவர் 2015 முதல் 2019 வரையிலான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இதே காலகட்டத்தில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2015ல் நடந்த ஐந்து நாடுகள் டோர்னமெண்ட்டில் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்திய அணியில் விளையாடும் போது ஓரளவு குடும்பத்தைச் சமாளித்து வந்த தினேஷுக்கு அதன்பிறகு சமாளிக்க முடியவில்லை. போலியோவால் கால்கள் முடங்கியதால் இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில் தான் தற்போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார் இந்த 35 வயதுக்காரர். ஆனால் இந்த வேலை கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கான காரணத்தைக் கூறும் அவர், ``நான் 12ம் வகுப்பு முடிந்ததில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு என் கையில் தற்போது பணம் இல்லை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தில் தற்போது ஒரு வேலை மட்டுமே உள்ளது.சாதாரண மக்களுக்கு இந்த வேலைக்கான தகுதி 25 வயது. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 35. ஆம், இதுவே எனது கடைசி வாய்ப்பு. நான் பிறந்தபோதே என் கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் என்றுவந்துவிட்டால் ஒருபோதும் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்று நினைத்து இல்லை" எனக் குமுறும் தினேஷுக்கு இந்த வேலை கிடைத்தாலே வாழ முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.