சூர்யா நடித்திருக்கும் படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. எனவே படம் வெளியாகாமல் முடங்கி இருக்கிறது.சூர்யா ரசிகர்களிடையே இப்படம் பெரிய எதிர்பார்ப்பைத் ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை தியேட்டர்களில் வெளியிட சூர்யா மற்றும் பட தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இதில் தியேட்டர் அதிபர் தரப்பில் தற்போது சிக்கல் எழுப்பப்பட்டுள்ளது. சூரரைப் போற்றுரிலீஸ் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சூர்யாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக நிற்கிறது.
தமிழில் சூர்யா தயாரிப்பில் உருவான படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்தனர். அதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. படத்தை தியேட்டரில் வெளியிடக் கேட்ட போது பட நிறுவனம் அதனை ஏற்க வில்லை. அப்போது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் பொன்மைகள் வந்தாள் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ரிலீஸ் செய்தால் சூர்யா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது.
கடந்த 4 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.
ஆனாலும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களை வெளியிடுவது குறித்த இறுதி முடிவு சங்க உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு தான் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 'சூரரைப் போற்று' ரிலீஸ் குறித்து இருதரப்பிலும் சுமூகமாக பேசி முடிவு எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.