`சமூகத்தின் மோசமான ரசனையாகிவிடும்!.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..

by Sasitharan, Aug 7, 2020, 19:37 PM IST

கேரளாவின் சர்ச்சை நாயகி ரெஹானா பாத்திமா, சில வருடங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவரின் இந்த செயல். இதன்பின், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருகிறார் பாத்திமா.

சமீபத்தில், Body Art and Politics என்ற பெயரில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அரை நிர்வாண கோலத்தில் பாத்திமா இருக்க அவரின் இரண்டு குழந்தைகளும் அவரின் உடல் மீது ஓவியம் வரைந்தனர். மேலாடை இல்லாமல் பாத்திமா அந்த வீடியோவில் குழந்தைகள் முன் இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர்மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. கைது செய்யப்படலாம் என்ற நிலையில் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால், ``வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு எல்லா குழந்தைகளுக்கும் பாலியல் கல்வியைக் கற்பிக்க முயற்சிப்பதாகக் கூறி தப்பிக்க முயல்வதை ஏற்க முடியாது. இது உடன்படும் நிலையில் இல்லை. இந்த வழக்கில் பாத்திமாவுக்கு ஜாமீனும் தர முடியாது. அதே நேரம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்வதை நீதிமன்றம் தடை செய்யாது" என பாத்திமாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

இவரின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர் காவே, கிருஷ்ணா முராரி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பாத்திமா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ``பாத்திமா மீது குழந்தைகளை வைத்து பாலியல் படம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் பாத்திமா தனது குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்துள்ளார். நம் நாட்டில் ஓர் ஆண் அரை நிர்வாணமாக நின்றால் குற்றமில்லை. ஆனால், அதுவே ஒரு பெண் அரை நிர்வாணமாக நின்றால் குற்றமாகிறது. தவறான குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

``இந்த வழக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. பாத்திமா சமூக ஆர்வலராக இருக்காலம். ஆனால், இந்த மாதிரியான செயல்பாடுகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. நம் தேசத்தின் கலாச்சாரம் குறித்து பாத்திமா என்ன மாதிரியான தத்துவத்தை குழந்தைகளுக்கு அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் கற்றுக்கொடுக்கப் போகிறார். இது மாதிரியான செயல்கள் சமூகத்தை மோசமான ரசனையில் விட்டுவிடும். அதனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்" என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் கைவிரித்தால், பாத்திமா விரைவில் கைது செய்யப்படுவார் எனக்கூறப்படுகிறது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை