கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிரத் தலைமை பைலட்டும், விமானப்படை கமாண்டருமான கேப்டன் தீபக் சாத்தே, துணை பைலட் அகிலேஷ்குமார் ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மழையில் ஓடுபாதை சரியாக இல்லாததால் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் பல முறை முயன்றிருக்கிறார்கள் விமானிகள் இருவரும். ஆனால் டேபிள் டாப் ரன்வேயாக இருந்ததால் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, இறந்த துணை விமானி அகிலேஷ் குமார் குறித்த தகவல் வெளிவந்துள்ளன. அகிலேஷ் குமார் டெல்லியைச் சேர்ந்தவர். 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்த அகிலேஷ் திறமையாக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவிக்கு இன்னும் 10 - 15 நாட்களுக்குள் பிரசவம் நடக்கவிருந்த நிலையில் தான் இந்த கோர விபத்தில் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார் அகிலேஷ். இதையடுத்து அகிலேஷின் குடும்பத்தினர் கோழிக்கோடு விரைந்துள்ளனர்.
``நேற்றிரவு, எங்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து போன் வந்தது. விபத்து குறித்துச் சொன்னவர்கள், முதலில் அகிலேஷின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறினர். சிறிது நேரத்தில் அவர் இறந்த செய்தியைச் சொன்னார்கள். லாக் டவுனுக்கு முன்பு தான் அகிலேஷ் கடைசியாக வீட்டிற்கு வந்தார். அகிலேஷ் மிகவும் பணிவான, நன்றாக பழகக்கூடியவர். அவரது மனைவிக்கு இன்னும் 15 நாளில் பிரசவம் இருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு மோசமான செய்தியை நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது" எனச் சோகத்தில் உறைந்துபோய் பேசியிருக்கிறார்கள் அகிலேஷின் உறவினர்கள்.
தலைமை பைலட் தீபக் சாத்தே உறவினரோ, ``என் நண்பரும், உறவினருமான தீபக் சாத்தே இனி இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விமானியாக அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. 1990ல் இந்திய விமானப்படையில் பணியாற்றியபோது விமான விபத்தில் இருந்து தப்பித்து ஆறு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 36 வருடப் பறக்கும் அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் பேசினார். எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருந்தார்" எனக் கூறியிருக்கிறார்.