கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவிக்கு இன்னும் 10 - 15 நாட்களுக்குள் பிரசவம் நடக்கவிருந்த நிலையில் தான் இந்த கோர விபத்தில் உயிரைப் பறிகொடுத்திருந்தார் அகிலேஷ்.
நேற்றிரவு, எங்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து போன் வந்தது. விபத்து குறித்துச் சொன்னவர்கள், முதலில் அகிலேஷின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறினர். சிறிது நேரத்தில் அவர் இறந்த செய்தியைச் சொன்னார்கள். லாக் டவுனுக்கு முன்பு தான் அகிலேஷ் கடைசியாக வீட்டிற்கு வந்தார். அகிலேஷ் மிகவும் பணிவானவர், நன்றாகப் பழகக்கூடியவர். அவரது மனைவிக்கு இன்னும் 15 நாளில் பிரசவம் இருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு மோசமான செய்தியை நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது" என அகிலேஷின் மறைவுகுறித்து அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பிணியான அகிலேஷ் மனைவி மேகாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அகிலேஷ் இறப்பு குறித்து மேகாவிடம் தெரிவிக்காமலிருந்துள்ளனர் அவரது உறவினர்கள். ஆனால் மேகாவுக்கு எப்படியோ இறப்பு குறித்துத் தெரியவர, கதறித் துடித்துள்ளார். சில மணிநேரங்களில் சுய நினைவு இழந்ததுபோல் இருந்துள்ளார் . இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அகிலேஷின் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. தன் கணவரின் உடலைப் பார்த்த மேகா, ``யார் இது. இவர் என் அகிலேஷ் அல்ல. அகிலேஷாக இருக்கவும் முடியாது. எனக்குப் பிரசவம் நடக்க இருக்கிற மருத்துவமனையில் அகிலேஷ் இருக்கிறார். நான் அங்கே செல்ல வேண்டும்" எனக் கூறி அடம்பிடித்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் நிலைமையைக் கூறி சமாதானம் செய்ய அதன் பின்னர் அகிலேஷுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.
.இந்த மாதம் 21ம் தேதி முதல் தன் மனைவியை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதற்காக விடுமுறை கோரியிருக்கிறார் அகிலேஷ். இந்த செய்தியை வீடியோ காலில் மனைவியிடமும் சொல்லியிருந்துள்ளார். ஆனால் அதற்குள் கோர விபத்து நடக்க, அகிலேஷின் உடல் மட்டுமே சொந்த ஊருக்கு வந்துள்ளது.