ராஜஸ்தானில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு.. கவிழ்ப்பு முயற்சி தோல்வி..

by எஸ். எம். கணபதி, Aug 14, 2020, 09:02 AM IST

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். பைலட்டுக்கு பின்னணியில் பாஜகவினர் உள்ளதாகவும், அவர்கள் தமது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாகவும் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.

சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு, மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் வளைக்க முயற்சித்தனர். அதேசமயம், அசோக் கெலாட் தனக்கு ஆதரவான 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார். கடந்த ஒரு மாதமாக அந்த எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறாததால், சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கடந்த 10ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும், அதன்பிறகு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் ராஜஸ்தான் திரும்பி, முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசினர். இதையொட்டி, நேற்று(ஆக.13) முதல்வரின் வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அனுமதியைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபை இன்று கூடுகிறது. அதில் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். எதிர்க்கட்சியான பாஜகவும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளது. எனினும், பேரவை விதிகளின்படி அரசு கொடுத்த நம்பிக்கை வாக்கெடுப்புதான் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இது பற்றி சபாநாயகர் சி.பி.ஜோஷி முடிவெடுப்பார்.தற்போது பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் திரும்பி விட்டதால், கெலாட்டுக்கு மெஜாரிட்டி உள்ளது. மொத்தம் 200 பேர் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். 13 சுயேச்சை உறுப்பினர்கள், மற்ற சிறிய கட்சிகளைச் சேர்ந்த 5 பேர் உள்பட 125 பேர் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். பாஜகவுக்கு அக்கட்சியின் 72 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணிக் கட்சியான ஆர்.எல்.டி. கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்களுமாக 75 பேர் உள்ளனர்.

கெலாட் கூறுகையில், பைலட் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் காங்கிரசுக்குத் திரும்பி இருக்காவிட்டாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இப்போது அவர்களே திரும்பி விட்டதால் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை