மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து எடுத்த சோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் அவரின் மகன் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குக் காரணம், மலேசியா வந்தவுடன் அவரைத் தனிமைப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த அறிவுரையைக் கண்டுகொள்ளாமல், தான் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று வந்துள்ளார். இதன்மூலம் தான் அங்கிருப்பவர்களும் தொற்று உறுதியானது.
இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இவர்களுக்கு வந்திருக்கும் வைரஸ் கொரோனா வைரஸின் திரிபு எனக் கருதப்படும் `D614G வகை வைரஸ் தொற்று ஆகும். கடந்த ஜூலை மாதம் தான் D614G வகை கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸை விட இந்த D614G வகை வைரஸின் வீரியம் அதிகமாகும். இந்த D614G வைரஸ் கொரோனாவைவிட பத்து மடங்கு வேகமாகவும் அதேநேரம் எளிதாகவும் பரவக்கூடியது. இந்த வைரஸ் குறித்த சோதனைகள் ஆரம்பக்கட்ட அளவிலேயே நடந்து வருகிறது. தற்போது தான் மலேசியாவில் கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குள் இந்த வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இது மலேசிய அரசுக்குக் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை பகுதியில் இருந்து இந்த நபர் மலேசியா சென்றதால் தமிழகத்திலும் இதன் பாதிப்பு இருக்குமா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.