திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்தது. மேலும் செயற்கை சுவாச கருவி (வெண்டி லேட்டர்) உதவியுடன் ஆக்ஸிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா பேசியதாக வந்த ஆடியோ குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அவருக்கு நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் குணமடைய நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உலகம் முழுவதும் அவரைத் திரும்பப் பார்க்க விரும்புகிறது. இந்த பின்னடைவுக்குப் பிறகு எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அண்ணையா இதிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்பிபி சரண் மாலையில் தந்தை உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டார். அதில் ஆக்ஸிஜன் செலுத்தும் வெண்டிலேட்டர் இன்னும் நீக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். வீடியோவில் சரண் கூறும்போது.என் அப்பாவுக்குச் செயற்கை முறையில் ஆக்ஸிஜன் செலுத்துவது நிறுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் பரவி வருகிறது. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் ஆனால் இன்னும் அவருக்குச் செயற்கை முறையில் தான் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. உங்கள் அனைவரின் பிரார்த்தனை அவரை மீட்டுக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.