குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஆக.25ம் தேதி முதல் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.குஜராத்தில் கேவடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்குச் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒற்றுமையின் சின்னம் என்று அழைக்கப்படும் இந்த சிலைப் பகுதியில் பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்படப் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மேலும், சிலையின் உட்பகுதிக்குள் லிப்ட் மூலம் மேலே சென்று நர்மதா ஆறு, மலைப்பகுதிகளைக் கண்டு ரசிக்கலாம்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, இந்த சுற்றுலாத் தலம் மூடப்பட்டது. கடந்த சில மாதங்களாக மக்கள் இப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது செப்.2ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.இந்நிலையில், இங்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை(சி.ஐ.எஸ்.எப்) நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து சி.ஐ.எஸ்.எப் படை இயக்குனர் ராஜேஷ் ரஞ்சனுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதில், படேல் சிலைப்பகுதியில் 272 சி.ஐ.எஸ்.எப் படை வீரர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆக.25ம் தேதி முதல் பணியில் சேருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.