எஸ்பிபி குணமாக இன்று கூட்டுப் பிரார்த்தனை.. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வேண்டுகோள்..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து வந்த நிலையில் கூடுதலாக எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.எஸ்பிபி உடல் நலம் அடைந்து மீண்டு வர இன்று மாலை (20ம்தேதி )6 மணிக்கு 5 நிமிடம் திரையுலகினர் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க இளையராஜா, சத்தியராஜ், எஸ்.ஏ.சந்திர சேகர், சிம்பு, கார்த்தி, பெப்ஸி ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த தசாவதாரம் போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியதாவது:
மதம், இனம், மொழி கடந்து எஸ்பிபி சார் மிக நல்ல மனிதர். அவர் பாடல் ஒலிக்காத நாள் இல்லை. இந்த உலகத்தில் பாதிப் பேர் வீடுகளில் தினமும் ஒரு பாடலாவது எஸ்பி பாடல் ஒலிக்கும். அவர் இன்று வாய்பேச முடியாமல் வாய் மூடி உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் உடல்நலம் அடைந்து வர, இன்று மாலை 6 மணிக்கு ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடமோ மனதாரா அவர் குணம் அடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால் அவர் பாடல் சுழலவிட்டு இதனைச் செய்யுங்கள். கூட்டுப் பிரார்த்தனையின் வலிமை அவரை மீட்டு வரும்.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

READ MORE ABOUT :