கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். கேரளாவில் கொரோனா காரணமாக இதுவரை பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிவி, செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்கள் மூலம் தான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சாபுவின் மகள்களுக்கு டிவியோ, போனோ இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சில தன்னார்வலர்கள் சேர்ந்து 15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி சாபுவின் மகள்களுக்குக் கொடுத்தனர். இலவசமாகக் கிடைத்த இந்த செல்போன் மூலம் தான் இவர்கள் 3 பேரும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். சாபு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி, மகள்களை அடித்து உதைப்பது வழக்கம். குடிப்பதற்குப் பணம் இல்லாவிட்டால் வீட்டில் இருந்து கையில் கிடைக்கும் ஏதாவது பொருளை எடுத்துச் சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் குடித்து காலி செய்வார்.
நேற்று சாபுவுக்கு குடிக்கப் பணம் கிடைக்கவில்லை. வீட்டுக்குச் சென்றபோது மகள்கள் பயன்படுத்தும் செல்போன் இருப்பதைப் பார்த்தார். உடனே அந்த செல்போனை மகளிடமிருந்து பறித்தார். இதில் அதிர்ச்சியடைந்த சாபுவின் மனைவியும், மகள்களும் கூக்குரலிட்டனர். ஆனால் சாபு அவர்களை அடித்து உதைத்து விட்டு செல்போனுடன் வெளியே சென்றார். கிடைத்த விலைக்கு அதை விற்றுக் குடித்தார். சாபுவின் வீட்டில் இருந்து வந்த கூச்சலைக் கேட்ட அப்பகுதியினர் அங்குச் சென்று விசாரித்தபோது சாபு செல்போனை பறித்துச் சென்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் அங்கமாலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று சாபுவை கைது செய்தனர்.