கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மகன் மூன்று வயதான பிருத்விராஜ். கடந்த மாதம் இந்த சிறுவன் 1 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாகக் கூறி அந்த சிறுவனின் தாய் ஆலுவா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்குக் குழந்தைகள் நல மருத்துவர் இல்லை என்று கூறி அவரை எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்தபோது வயிற்றில் 1 ரூபாய் நாணயம் இருந்தது தெரியவந்தது.
ஆனால் சிகிச்சைக்கு அங்கும் குழந்தைகள் நல மருத்துவர் இல்லை என்பதால் ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு அந்த சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், பயப்படத் தேவையில்லை என்றும், சாதமும், பழமும் கொடுத்தால் நாணயம் வெளியே வந்துவிடும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அன்று இரவு சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அந்த சிறுவனை ஆலுவா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
நாணயம் விழுங்கியது தான் குழந்தை இறந்ததற்குக் காரணம் என்றும், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் பிருத்விராஜின் உறவினர்கள் கூறினர். ஆனால் அதை மருத்துவர்கள் அப்போதே மறுத்தனர். குழந்தையின் மரணத்திற்கு நாணயம் விழுங்கியது காரணமல்ல என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர் அந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், குழந்தையின் மரணத்திற்கு நாணயம் விழுங்கியது காரணமல்ல என்றும், மூச்சுத்திணறல் தான் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்திருக்கலாம் என்றும், அதற்கு முறையான சிகிச்சை அளிக்காததே மரணத்திற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.